புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கோர்க்காடு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி லட்சுமி, 43 வயதான இவருடைய கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த லட்சுமி அவரது தாயார் சுந்தரி மற்றும் மகன்கள் விக்னேஷ் குமார், சந்தோஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
மகன்கள் வேலைக்கு சென்ற நிலையில் லட்சுமி தாயாருடன் இருந்து உள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் காவி வேட்டி அணிந்து சாமியார் போல வந்துள்ளனர், லட்சுமியிடம் பேச்சுக் கொடுத்த போலி ஆசாமிகள், மூலிகை கலந்த எண்ணெய் வைத்துள்ளோம் 20,000 ரூபாய் கொடுத்தால் மந்திரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
அதனை மூதாட்டிக்கு இரு வேலையும் உடலில் தடவி வந்தால் கை,கால் வலி உள்ளிட்ட நோய்களும் குணமாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய லட்சுமி அவர்களிடம் பேரம் பேசி 8,500 ரூபாய் கொடுத்து மூலிகை எண்ணெய் கேட்டுள்ளார்.
அப்போது இளைஞர்கள் வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெய் பெற்றுக்கொண்டு அதில் சில மூலிகைகளை போட்டு கருப்பாக்கி கொடுத்துள்ளனர். அப்போது உங்கள் வீட்டில் யாரோ சிலர் சூனியம் வைத்துள்ளனர். இதனால்தான் உனது கணவர் இறந்துள்ளார். பிள்ளைகளுக்கும் சூனியம் பாதிக்கும் வகையில் உள்ளது என லட்சுமியுடன் கூறியுள்ளனர்.
சூனியம் எடுக்க எவ்வளவு செலவாகும் என லஷ்மி கேட்க அவர்கள் பணம் வேண்டாம் நகை கொடுத்தால் நள்ளிரவு பூஜை செய்து மந்திரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு கொடுக்கிறோம். அதனை அணிந்து கொண்டால் சூனியம் விலகும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த போலி சாமியார்களின் பேச்சை நம்பிய இலட்சுமி தான் அணிந்திருந்த தங்க செயின் கம்மல்,என 3 சவரன் நகையை கழற்றி கொடுத்துள்ளார்.
நகை மற்றும் பணத்துடன் சாமியார் வேடம் போட்ட இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.வேலைக்கு சென்ற மகன்கள் வீடு திரும்பியபோது மகன்களிடம் நடந்த சம்பவத்தை லட்சுமி தெரிவித்துள்ளார்.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் கரிக்கலாம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:'கல்யாணம் செஞ்சு வைங்க' - காவல் நிலையம் சென்ற லெஸ்பியன் காதல் ஜோடி!