புதுச்சேரி: கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுத்துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், தீயணைப்பு துறை, புள்ளியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் போன்ற அரசு பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் எம்பிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக பாமக சார்பில் கொடுக்கப்பட்ட பல மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து பாமகவின் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் இன்று (நவ.17) அண்ணா சிலை அருகே பேரணி நடந்தது. தொடர்ந்து முக்கிய வீதிகளில் சென்ற பேரணி திடீரென சட்டப்பேரவையை அடைந்தது. அங்கு போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தொண்டர்கள் தூக்கி எரிந்தனர்.
தொடர்ந்து, சட்டப்பேரவை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடி, சட்டப்பேரவை நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது, அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் பின்பு சட்டப்பேரவை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மாநில அமைப்பாளர் கணபதி கூறுகையில், புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்ட பழைய இட ஒதுக்கீடு முறையே தொடர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அடுத்த கட்டமாக மருத்துவர் ராமதாஸின் ஆலோசனை பெற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரியா குடும்பத்திற்கு முதலமைச்சர் அளித்த பரிசு நிவாரணம்: அமைச்சர் பேச்சு