மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அதனைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லி எல்லையில் கடந்த 30 நாள்களுக்கு மேலாக விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின்கீழ் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.18 ஆயிரம் கோடியை இன்று (டிச. 25) மதியம் 12 மணிக்கு காணொலி வாயிலாகத் தொகையை வெளியிடுகிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை மோடி 25ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடுகிறார்.
ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுவார்.
அப்போது, பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்-கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்தாண்டு (2019) பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசின் 100 விழுக்காடு நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும். பி.எம்-கிசான் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது, மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 செலுத்தப்படுகிறது.
நேரடி நன்மை பரிமாற்றம் (டிபிடி) முறை மூலம் இந்தத் தொகை நேரடியாக விவசாய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி