டெல்லி: மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இன்று (மே 23) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் "அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அடுத்ததாக வரும் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மைசூரில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 70 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதில் மத்திய அமைச்சர்கள், சினிமா, விளையாட்டுத்துறை பிரபலங்கள், யோகா வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக நேரலையாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா தின நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி கற்பிக்கும் சண்டிகர் பல்கலைக்கழகம்!