டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் சென்றார். அவர் சாலை மார்க்கமாக காரில் பயணித்த நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பிரதமரின் பயணத்தில் குறுக்கிட்டனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என மூத்த வழக்குரைஞர் மணீந்தர் சிங், தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம் முறையிட்டார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக்குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழு இன்று(ஆக.25) உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "கடந்த ஜனவரி 5ஆம் தேதி மோசமான வானிலையால் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு, சாலை மார்க்கமாக சென்றார். பயணத்தின்போது சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால், அவர் 20 நிமிடங்கள் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான். பிரதமரின் வருகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டபோதும், பெரோஸ்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: பிரதமரின் பஞ்சாப் பயணம் மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் ரத்து!