பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 5ஆம் தேதி புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது பிரதமர் விமான நிலையத்திலிருந்து நிகழ்விடத்திற்கு செல்லும் வழியில், மேம்பாலம் ஒன்றில் அவரது கான்வாய் போராட்டக்காரர்களால் 15-20 தடுத்து நிறுத்தப்பட்டது.
திரும்பி சென்ற பிரதமர்
போராட்டக்காரர்கள் வழி விடாததால், கூட்டத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி டெல்லி திரும்பி சென்றார். மேலும், தான் பத்திரமாக டெல்லி திரும்ப உதவிய பஞ்சாப் முதலமைச்சருக்கு நன்றி எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பயணத்திட்டத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசு ஆகியவற்றின் மீது விமர்சனங்கள் முன்வைத்து கேள்வி எழுப்பப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையில் இன்று(ஜன.12) நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர், சண்டிகர் டிஜி, பஞ்சாப் மாநில ஏடிஜிபி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், இவ்விகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தற்போது மேற்கொண்டுவரும் அனைத்து விசாரணைகளையும் நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: Medical College Inauguration: 11 புதிய மருத்துவ கல்லூரிகள் -இன்று திறந்து வைக்கிறார் மோடி