கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பல துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றுவரும் மாநாட்டில் விளக்கிவருகிறார்.
இந்நிலையில், வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பேசிய மோடி, வழக்கமான பயிர் வகை விவசாயம் என்ற வரம்புக்குள் அடைந்து விடாமல் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் தோட்டக்கலையை ஆராய வேண்டும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கோதுமை, நெல் ஆகிய பயிர் விவசாயத்துடன் அடைந்து விடாமல் விவசாயிகளுக்கு மாற்றை உருவாக்கி தருவது தற்போதைய தேவையாக உள்ளது. இயற்கை உணவு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விவசாயம் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம்.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாய கடன் 15 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 16.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கிராமப்புற பொருளாதாரத்தின் உந்து சக்தியாக சிறு மற்றும் குறு விவசாயிகள் திகழவுள்ளனர். 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது" என்றார்.