ஹைதராபாத் : ஏஐஎம்எம் (AIMIM) கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் இரண்டு விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசமாட்டார்.
அவை பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு. சீனா குறித்து பேச பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். ஜம்மு காஷ்மீரில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அக்.24 இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் நாள்தோறும் நமது வீரர்கள் கொல்லப்பட்டுவரும்நிலையில், விளையாட்டு தேவையா? பாகிஸ்தான் தினந்தோறும் ஜம்மு காஷ்மீரில் டி20 விளையாடி இந்திய உயிர்களை அச்சுறுத்துகிறது” என்றார்.
தொடர்ந்து, பாஜக அரசாங்கம் ஜம்மு காஷ்மீரில் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறினார். இது குறித்து ஓவைசி, “பிகார் ஏழை தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர், உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்து கொண்டிருக்கிறார். இது மத்திய அரசின் தோல்வி” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தற்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். குறிப்பாக வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வணிகர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை - கனிமொழி