சோம்நாத்: தமிழ்நாட்டுக்கும், குஜராத்துக்கும் இடையேயான உறவு நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அங்குள்ள சவுராஷ்டிரா சமூக மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கி உள்ளது. இதை நினைவுகூரும் விதமாக சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. சோம்நாத், துவாரகா, ராஜ்கோட், ஏக்தா நகர் ஆகிய நகரங்களில் குஜராத் மாநில அரசு சார்பில் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா சமூக கலாசாரங்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில், சோம்நாத் அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக சோம்நாத் அறக்கட்டளையின் பொது மேலாளர் விஜய் சிங் சவ்தா கூறுகையில், "சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே, சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத்தை பூர்வீகமாக கொண்ட சவுராஷ்டிரா சமூக மக்கள் பெரும்பாலானோர், தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் சங்கமம் நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டில் வசிக்கும் சவுராஷ்டிரா சமூக மக்களுக்கு சோம்நாத் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து குஜராத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயான கலாசார தொடர்பை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒரு மாதம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இருமாநிலம் சார்பில் கருத்தரங்குகள், கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு மத்திய அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: "வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் எதிரிகளே": பிறந்த நாளில் கங்கனா ஓபன் டாக்!