டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று (ஏப். 21) சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜான்சன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை சந்தித்தார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் இன்று (ஏப். 22) டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தகம், இந்தோ-பசிபிக், உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
2017ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக போரிஸ் ஜான்சன் வந்திருந்தார். இதையடுத்து பிரதமராக பதவியேற்றப்பின், இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்தார்.
ஆனால், கரோனா காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்ட பயணமும் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே ஜான்சன் இந்தியா வந்துள்ளார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமர் போரிஸின் இந்தியப் பயணத்தின் முதல் நாள் நிறைவு