இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே காணொலி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் புக்குடன் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, உச்சி மாநாட்டின்போது வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் இரு நாடுகள் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரி 2020 வியட்நாம் துணைத் தலைவர் டாங் தி நொகோக் தின் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று குறித்து இருநாட்டு பிரதமர்களும் தொலைபேசி மூலம் கேட்டறிந்து கொண்டார்.