டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய தளவாடக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப் 17) வெளியிட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், "நாட்டில் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கவும், சரக்கு போக்குவரத்துக்கான நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தவும் தேசிய தளவாடக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப நாட்டின் துறைமுகங்களின் சரக்கு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைமுகங்களுக்காக சாகர்மாலா என்னும் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் செலவுகள் குறைக்கப்பட்டு வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. முக்கிய உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் தேசிய தளவாடக் கொள்கை மிக அவசியம்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், "வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்ததால் தேசிய சரக்கு தளவாடக் கொள்கை தேவைப்பட்டது. இந்திய சரக்குகள் உள்ளூர் நிலையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும், போட்டியிடுவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சரக்கு போக்குவரத்துக்கான செலவை இந்தியாவில் குறைப்பது அவசியமாக உள்ளது.
இந்த செலவுக் குறைப்பு நாட்டின் பல்வேறு துறைகளில் திறனை மேம்படுத்தும். மேலும், மதிப்புகூடுதலை ஊக்குவிக்கும். பலதுறைகளை மற்றும் பல எல்லை வரம்புகளை இணைக்கும் கட்டமைப்புடன் இருப்பதால், தேசிய சரக்கு தளவாடக் கொள்கை அதிகப்பட்ச செலவு மற்றும் திறன் இன்மை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சிக்கு இது மேலும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. இந்திய சரக்குகளின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சி என்பதோடு பொருளாதார வளர்ச்சியை விரிவுப்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்குமான முயற்சியாக இந்தக் கொள்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற கல்வியிலும் திறமையிலும் சமமான தேர்ச்சி அவசியம்