டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. பல நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை.
இதனால், மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 8ஆம் தேதி முதல் மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று(ஆகஸ்ட் 9) காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மணிப்பூரில் இந்தியாவை கொலை செய்துவிட்டார்கள் என்றும், மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். திரெளபதியைப் போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டபோதும், இரட்டை இன்ஜின் அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கனிமொழி குற்றம் சாட்டினார்.
நேற்று மாலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்வதாக அமித்ஷா குற்றம் சாட்டினார். மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது என்றும், அதை அரசியலாக்குவது அதைவிட வெட்கக்கேடானது என்றும் கூறினார். ராகுல்காந்தி அரசியல் செய்வதற்காகவே மணிப்பூர் சென்றார் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பான சூழலில், இன்று (ஆகஸ்ட் 10) பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை ஆற்ற உள்ளார். பிரதமர் மோடியின் பதில் உரைக்காக அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.