டெல்லி: புதிய தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர இன்று (ஜன 15) காலை 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார். வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், வின்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய தொழில்முனைவோர் இந்தக் கலந்துரையாடலின் பகுதியாக இருப்பார்கள்.
வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் ஆறு பணிக்குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்.
இந்தக் கலந்துரையாடலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையப்பொருள்கள் மீது ஒவ்வொரு குழுவினரும் பிரதமர் முன்னிலையில் விளக்கமளிப்பார்கள். நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை இயக்குவதன் மூலம் தேசிய தேவைகளுக்கு புதிய தொழில்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை புரிந்துகொள்வது இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக “புதிய கண்டுபிடிப்பு நடைமுறையைக் கொண்டாடுவோம்” என்ற ஒரு வார கால நிகழ்வை 2022 ஜனவரி 10 முதல் 16 வரை தொழில், வர்த்தக அமைச்சகத்தின் டிபிஐஐடி நடத்துகிறது. இந்த நிகழ்வு இந்திய புதிய தொழில் முன்முயற்சி தொடக்கத்தின் ஆறாவது ஆண்டினைக் குறிப்பதாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு புதிய தொழில்களின் ஆற்றல் குறிப்பிடித்தக்க பங்களிப்பு செய்யும் என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கை உள்ளவர். இது 2016ல் இந்தியாவில் புதிய தொழில்கள் முன்முயற்சி தொடங்கப்பட்டதில் பிரதிபலித்தது.
புதிய தொழில்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகப்படுத்துவதற்கான சூழ்நிலையை அளிப்பதற்கு அரசு பணியாற்றிவருகிறது. இது நாட்டின் புதிய தொழில் நடைமுறையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டின் ஐந்து கோடிக்கும் அதிகமான முதலீட்டு தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.