டெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடந்துவருகின்றன. இந்த முகாம்களை (ரோஸ்கர் மேளா) பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
அப்போது முதல்கட்டமாக 75,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் 2ஆவது கட்டமாக புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணியளவில் காணொலி (நவம்பர் 22) வழங்குகிறார்.
சென்னை உட்பட நாடு முழுவதும் 45 இடங்களில் புதிய பணி ஆணைகள் நேரடியாக வழங்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், செவிலியர்கள், விரிவுரையாளர்கள், செவிலி அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்தாளர்கள், ரேடியோ கிராபர்கள், துணை மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகளுக்கும் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட பல்வேறு மத்திய ஆயுத காவல் படைப்பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் தொடங்கி வைக்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு igotkarmayogi.gov.in என்னும் இணையதளத்தில் இதர பயிற்சி வகுப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நடைப்பயணம் செய்வோருக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் வித்தியாசம் தெரியாது - பிரதமர் மோடி