ஐநா சபைக் கூட்டம், இந்தியா- அமெரிக்கா இருதரப்புப் பேச்சு, குவாட் நாடுகள் (நாற்கர நாடுகள்) கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க நரேந்திர மோடி இன்று (செப். 22) அமெரிக்கா புறப்பட்டார்.
கோவிட்-19 இரண்டாம் அலைக்குப் பின் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். நரேந்திர மோடியின் பயணத்திற்கு முன்னதாகவே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்று முகாமிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் இந்தப் பயணத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா ஆகியோரும் உடனிருப்பர் எனத் தெரியவருகிறது.
இருநாட்டு பேச்சுவார்த்தை
முதல் நாள் நிகழ்வில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடன் அந்நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து அந்நாட்டுத் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
பின்னர் ஜோ பைடனுடன் விருந்தில் பங்கேற்கும் நரேந்திர மோடி, அவருடனும், அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸுடனும் சந்தித்துப் பேசுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த குவாட்
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பு உருவாக்கியுள்ளன. இந்த நாற்கர கூட்டமைப்பின் முதல் நேரடி உச்சி மாநாடு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் நரேந்திர மோடி, ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளனர்.
மேலும் இத்தலைவர்களுடன் தனித்தனியே இருதரப்பு பேச்சுவார்த்தையும் மேற்கொள்கிறார் நரேந்திர மோடி. இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியலில் நகர்வை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஐநா சபைக் கூட்டம்
தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தில் முதல் பேச்சாளராக நரேந்திர மோடி பேசவுள்ளார். இந்தக் கூட்டத்தில், பிராந்திர விவகாரங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசவுள்ளார்.
இதையும் படிங்க: IPL 2021: கடைசி ஓவரில் ராஜஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்த பஞ்சாப்