டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் B20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளில், பிரதமர் மோடி, சிறப்புரை ஆற்ற உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி, வெளியிட்டு உள்ள X பதிவில், "சர்வதேச அளவிலான வணிக சமூகத்தில் பங்கேற்று உள்ள பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, B20 உச்சி மாநாட்டில், ஆகஸ்ட் 27ஆம் தேதி, மதியம் 12 மணி அளவில் உரையாற்ற உள்ளேன்" என குறிப்பிட்டு உள்ளார்.
பிசினஸ் 20 (B20) என்பது, உலகளாவிய வணிக சமூகத்துடனான அதிகாரப்பூர்வமான ஜி 20 நாடுகளின் உரையாடல் அமைப்பு ஆகும். 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட B20 அமைப்பு, நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளை பங்கேற்பாளர்களாகக் கொண்ட ஜி20 நாடுகளின் மிக முக்கியமான ஈடுபாடு குழுக்களில் ஒன்றாக திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் அதுதொடர்பான வளர்ச்சியை தூண்டுவதற்கு உறுதியான செயல்பாட்டு கொள்கை பரிந்துரைகளை வழங்கும் வகையில் B20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிசினஸ் 20 அல்லது ‘B20 மாநாடு இந்தியா 2023’ மாநாடு, தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இம்மாநாடு, R.A.I.S.E எனப்படும் பொறுப்பான, விரைவுபடுத்தப்பட்ட, புதுமையான, நிலையான மற்றும் சமமான வணிகங்கள் என்பதே, இந்த மாநாட்டின் கருப்பொருளாக வகுக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், ஜெய்சங்கர், பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபார நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டு, உலகளாவிய வணிகங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள X பதிவில், "சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில், மிக முக்கியமான அமைப்பாக B20 திகழ்ந்து வருகிறது. B20 உச்சி மாநாடு, சர்வதேச அளவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வணிகத்தில் ஈடுபட்டு உள்ள தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே இடத்தில் விவாதிக்க வழி ஏற்படுத்தி தந்து உள்ளது. இந்த உச்சிமாநாட்டின் மூலம், 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகளை, ஜி20 நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக" தெரிவித்து உள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கல்வியே, அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படை ஆகும். எழுச்சி பெறும் தேவைகளுக்கு ஏற்ப, நாம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம் ஆகும். சர்வதேச அளவிலான நன்மை மற்றும் நல்வாழ்வு திட்டங்களுக்கான ஆய்வகமாக, இந்தியா திகழ்கிறது.
அனைத்து விதமான வளர்ச்சிகளின் தாயகமாக கல்வியே உள்ளது. இந்தியா, திறமைகளின் களஞ்சியமாக விளங்கி வருகிறது. 21ஆம் நூற்றாண்டிற்காக, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், தேசிய கல்விக் கொள்கை 2020 வகுக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரக்ஞானந்தா: ரசிகர்களுக்கு நன்றி.....ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு!