ஷீரடி : மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சிலர் விவசாயிகளை வைத்து அரசியல் மட்டும் செய்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை மறைமுகமாக சாடினார்.
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 50 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநில மக்கள் எதிர்பார்த்திருந்த நில்வாண்டே அணை கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதாகவும் அனைவருக்கும் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளதாக தெரிவித்தர்.
நாடு முழுவதும் சிறு விவசாயிகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 26 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய ஆட்சிக் காலத்தில் சிலர் விவசாயிகளை வைத்து அரசியல் மட்டுமே செய்ததாக பிரதமர் மோடி கூறினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவர், நாட்டின் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்ததாகவும் அவரை தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன் என்று கூறிய பிரதமர் மோடி, ஆனால், அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.
அவர் அமைச்சராக இருந்த போது, இடைத்தரகர்களின் கருணையை விவசாயிகள் எதிர்பார்த்ததாகவும், பணத்தை பெற பல மாதங்கள் காத்திருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மத்திய வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை - கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு! மத்திய அரசின் நடவடிக்கை என்ன?