ஐதராபாத் : ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுத்தமான சித்தாரத்தின் கீழ் பிறக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரலற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இந்தியாவின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவு, அரசியலமைப்பின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கானதே தவிர, சிதைக்க இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் கவனித்து சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது அல்ல தெரிவித்து உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
கவிஞர்களின் கலை நயத்திற்கும் இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிற்கும் பாத்திரமாக காணப்பட்ட ஜம்மு காஷ்மீர் கடந்த 70 ஆண்டுகளாக மிக மோசமான வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மையைக் கண்டு இருப்பதாக மோடி கூறி உள்ளார். பல ஆண்டுகளாக காலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் மற்றும் மனரீதியிலான பிரச்சினைகளை சமூகங்கள் கண்டதாகவும் அதுபோன்ற சூழலையே ஜம்மு காஷ்மீரில் நிலவி அத்தகைய மனநிலைக்கு தள்ளி விட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஜம்மு காஷ்மீர் இடையே உள்ளது கருத்தியல் ரீதியிலான பிரச்சினைகள் தவிர்த்து அங்கு உள்ள மக்களின் உணர்வுப்பூர்வமானது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, காஷ்மீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்ததாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட லியாகத் - நேருவின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் நேருவுடன் ஏற்பட்ட கருத்தியில் ரீதியிலான பிரச்சினையால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
அவரது முயற்சிகள் மற்றும் தியாகம் கோடிக்கணக்கான இந்தியர்களை காஷ்மீர் பிரச்சினையில் உணர்வுபூர்வமாக இணைக்க வழிவகுத்ததாகவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எழுப்பிய முழக்கங்கள் அம்மக்களுக்கு உத்வேகத்தையும் அளித்ததாகவும் பிரதமர் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்தது நமது தேசத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெரிய துரோகம் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்றும் அதுவே அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அகற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் ஊக்குவித்ததாகவும் ஜம்மு காஷ்மீர் மக்களின் துன்பத்தைப் போக்க தான் எப்போதும் உழைக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு, தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பெறும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதில் சிறப்பு அந்தஸ்து தடையாக இருந்ததாகவும் அதன் விளைவாகவே ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள், சக இந்தியர்கள் பெற்ற உரிமைகள் மற்றும் வளர்ச்சியை காண முடியவில்லை என்றும் பிரதமர் கூறி உள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சிகளை நெருக்கமாக பார்த்தவன் என்ற முறையில், இதில் உள்ள பிரத்தியேகங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய நுணுக்கமான புரிதல் தனக்கு இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்கள் மக்கள் வளர்ச்சியை விரும்புவதாகவும், தங்களது பலம் மற்றும் மற்ற திறன்களின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் மக்கள் தங்களது குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வன்முறை மற்றும் உறுதியற்ற சூழல்களில் இருந்து விடுபட விரும்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பதியப்பட்ட ஒருநாள் என்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான வரலாற்று முடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் மூன்று பிரதேசங்களின் வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தின் முடிவை ஏற்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டு உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பெண்கள், பட்டியலின மக்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய உரிமை கிடைக்காத நிலையில், 2019 ஆகஸ்ட் 5 நாடாளுமன்றத்தின் முடிவு அதை மாற்றி உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நடைமுறையில் உள்ளதாகவும் தொகுதி மேம்பாட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். மத்திய அரசின் அனைத்து முக்கிய திட்டங்களும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைந்து உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய அரசின் சிறப்பு திட்டங்களான சௌவ்பாக்யா, உஜ்வாலா திட்டங்களும் வீட்டுவசதி, குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும் என தெரிவித்து உள்ளார். பொது சுகாதாரம் பெரிய சவாலாக காணப்பட்ட நிலையில் தற்போது அதன் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் தரம் மிகுந்த பள்ளிகள், அனைத்து கிராமங்களும் சுவச் பாரத் திட்டத்தின் தூய்மையான கழிப்பறைகளை கொண்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். ஊழலுக்கும், விருப்பு வெறுப்புக்கும் இடையூறாக இருந்த அரசு காலிப் பணியிடங்கள், வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
உள்கட்டமைப்புகள் மேம்படுத்தலின் மூலம் சுற்றுலா உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி கண்டு உள்ளதாகவும், அதன் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். டிசம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதையும் படிங்க : பல்கலைக்கழக பட்டதாரி - ராஜஸ்தான் முதலமைச்சர் - யார் இந்த பஜன்லால் சர்மா?