நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
இந்த உரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பதிலடி தரும் விதமாக தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
முன்னதாக, பிப்.4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றும் போது, மத்திய பாஜக அரசு இந்தியாவின் மாநிலங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு மதிப்பளிக்காமல், அரசாட்சி போல செயல்பட்டு தனது கொள்கைகளை திணிக்க முயல்கிறது.
தமிழ்நாடு மக்களுக்கு என தனி உணர்வு உள்ளது. அவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான உணர்வை கொண்டிருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் உங்களால் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆள முடியாது என பேசியிருந்தார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடி இன்று பேசுகையில், தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்து மக்களவையில் பேசுகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி குளிர்காயப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களால் ஒருபோதும் நாட்டின் ஒற்றுமையை குலைக்க முடியாது. நான் மகாகவி பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன் எனக் கூறி பாரதியின் " மன்னும் இமயமலை எங்கள் மலையே" என பாடலை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து அவர், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைந்த போது, "அவரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் முன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் குழுமி நின்று வீர வணக்கம் வீர வணக்கம் என கண்ணீருடன் குரல் கொடுத்து சல்யூட் அடித்தனர். இதுதான் இந்தியாவின் அடையாளம்" என்றார்.
காங்கிரஸ் கட்சியை அனைத்து மாநிலங்களும் நிராகரித்துவிட்டதாகக் கூறிய பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்கள் 1962ஆம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் சாந்திஸ்ரீ