சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று (செப்-15) பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டிற்கு சென்றார். பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை இன்று (செப்-16) சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து பிரதமர் மோடியின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து போடப்பட்ட பதிவில், "பிரதமர் மோடி சமர்கண்டில் SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்," எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதன்முதலில் ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களால் 2001ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக, இது மிகப்பெரிய டிரான்ஸ்-பிராந்திய சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
2017இல் இந்தியாவும் பாகிஸ்தானும் அதன் நிரந்தர உறுப்பினர்களாக மாறியது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சமர்கண்ட் உச்சிமாநாட்டில் ஈரானுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு... உஜ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி