உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பஞ்சாப்பைத் தவிர ஏனைய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தல் வெற்றிக்குப்பின் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை வருகை பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெற்றி குறித்து உரையாற்றினார்.
இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளான இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி வருகைதந்துள்ளார். இரு நாள் சுற்றுப் பயணமாக குஜராத் வந்தடைந்த பிரதமருக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு தந்துள்ளனர். அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து மாநில கட்சி அலுவலகத்திற்கு சாலை மார்க்கமாக திறந்த வெளி வாகனத்தில் பேரணியாக சென்றார்.
இந்த பேரணியின் போது வழி நெடுகிலும் குழுமியிருந்த தொண்டர்களுக்கு பிரதமர் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். தொண்டர்களும் பிரதமருக்கு மலர்களைத் தூவி பிரம்மாண்ட வரவேற்பு தந்தனர். கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, பின்னர் மாலை மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றவுள்ளார்.
நாளை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், இரு நாள் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இப்போதே தனது பணிகளை பிரதமர் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவை சரிய வைக்க முடியும் என நிரூபித்துள்ளோம் - அகிலேஷ் யாதவ் ட்வீட்