கொல்கத்தா: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்(100) இன்று(டிச.30) அதிகாலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைடுத்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு விரைந்தார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடியின் தாயார் இறந்ததால், இன்று மேற்குவங்கத்தில் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பங்கேற்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, தாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இதுபோன்ற இக்கட்டான ஒரு நாளிலும், தாங்கள் கடமைகளை செய்வது மிகவும் பாராட்டத்தக்கது என்று மம்தா பானர்ஜி கூறினார். அதேபோல், மேற்குவங்கத்தில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க:ஹீராபென் மோடி மறைவு: முக்கிய தலைவர்கள் இரங்கல்