ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு (WSJ) பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவது, சீன எல்லை ஊடுருவல் ஆகியவை குறித்து அவர் பதில் அளித்து உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இருக்க வேண்டுமா என்று உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும் என்று மோடி பதிலுரைத்தார். “சபையின் தற்போதைய உறுப்பினர்களின் மதிப்பீடு அதில் இருக்க வேண்டும், இந்தியா அங்கு இருக்க வேண்டுமா என்று உலகம் கேட்க வேண்டும். இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் மற்றும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிலையான அமைதியை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கும். எந்த நாட்டின் இடத்தையும் மாற்றாமல், உலக அளவில் இந்தியா சரியான இடத்தைப் பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
சீன எல்லை ஊடுருவல்: சீனாவைப் பொறுத்தவரை, சீனாவுடன் இயல்பான இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதற்கு அவசியமான எல்லைப் பகுதிகளில் அமைதியை இந்தியா எதிர்பார்க்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும், “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது, சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடிப்பது மற்றும் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பது ஆகியவற்றில் எங்களுக்கு முக்கிய நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க உறுதியுடன் முழுமையாக தயாராக உள்ளது” என்று கூறினார்.
இந்தியாவின் முன்னுரிமை அமைதி: அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தையும் நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். சர்ச்சைகள் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும், போர் மூலம் அல்ல. நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை.
நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் என்பதில் உலகம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். இன்று உலகம் முன்னெப்போதையும் விட ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. மீள்தன்மையை உருவாக்க விநியோகச் சங்கிலிகளில் பல்வகைப்படுத்தல் இருக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர்: சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான் தான், அதனால்தான் எனது சிந்தனை செயல்முறை, எனது நடத்தை, நான் சொல்வது மற்றும் செய்வது, எனது நாட்டின் பண்புகள் என அனைத்தும் பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டு எனது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அதிலிருந்து தான் என் பலத்தைப் பெறுகிறேன் என அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.