வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் 13ஆம் தேதி நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக உலகின் நீண்ட தூர நதிப் பயணம் மேற்கொள்ளும் எம்.வி.கங்கா விலாஸ் என்னும் சொகுசு சுற்றுலா கப்பலைத் துவக்கி வைக்கிறார்.
சுற்றுலா பயணத்தை துவங்குவதற்கு முன்பே உள்ளூர் மட்டுமின்றி, உலக அளவிலான சுற்றுலா பயணிகளிடையே எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. டைட்டானிக் கப்பலுக்கு ஈடாக நதிப் பயணத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை கண் முன்னே கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் கொண்டு வந்து நிறுத்தும் எனக் கூறப்படுகிறது.
எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் குறித்த ஆச்சரியமூட்டும் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களை தற்போது பார்க்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து புறப்படும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல், 27 நதிகள் வழியாக இந்தியா - வங்காளதேசம் இடையே 5 மாநிலங்களைக் கடந்து 3ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் இருந்து புறப்படும் சொகுசுக் கப்பல், வங்காளதேசம் வழியாக 51 நாட்கள் பணித்து அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரை அடைகிறது. 62 மீட்டர் நீளம் உள்ள கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல், 36 பயணிகள் சொகுசாக தங்கும் வகையில், அனைத்து வசதிகளுடனும் ஏற்படுத்தப்பட்டு மிக ஆடம்பரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 18 சூட் ரூம்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்து விதமான வசதிகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாட்னா, ஷகீப்கஞ்ச், கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா, அஸ்ஸாமின் கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள், காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் வழியாக சொகுசுக் கப்பல் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கா ஆர்த்தி, சார்நாத், புத்த மத கோயில்கள் எனப் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களைக் கடந்து கப்பல் பயணம் நீள்கிறது. ஜனவரி 13ஆம் தொடங்கும் சுற்றுலா பயணத்தில், பயணி ஒருவருக்கு நாளொன்றுக்கு 25ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல் சரியாக மார்ச் 1ஆம்தேதி அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலில் ஒரு முறை 36 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நதிப் பயணம் மேற்கொள்ளும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல், சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான உணர்வு மற்றும் மறக்க முடியாத ஆடம்பரமான அனுபவத்தை கொடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Russia - Ukraine War: "போரால் ஒரும் பலனும் இல்லை" - ஈகுவடார் முன்னாள் அதிபர்!