டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.30) டெல்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை (ஏப்.30) முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கலந்து கொண்ட சட்ட மாநாட்டை தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் பேசிய நரேந்திர மோடி, நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். இது பொது மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை ஊக்கப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சாதாரண குடிமக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பெருக்குவதுடன் மட்டுமில்லாமல் நீதிதுறைக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “2015ஆம் ஆண்டு நாட்டில் பொருத்தமில்லாத 1,800 சட்டங்கள் கண்டறியப்பட்டன. இதில் 1,450 சட்டங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன” என்றார். இருப்பினும் இந்த சட்டங்களில் மாநில அரசுகள் 75 சட்டங்களை மட்டுமே ஒழித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த சட்டங்களை உடனடியாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த மாநாட்டில் மத்திய நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா மற்றும் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் உள்பட பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாடானது 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பரபரக்கும் டெல்லி; மம்தா-கெஜ்ரிவால் சந்திப்பு!