புதிய பாபூர்-புதிய குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை (ஈ.டி.எஃப்.சி.) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய அவர் நாட்டின் உள்கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
அதில், "சுதந்திரத்திற்குப்பின் நாடு மிகப்பெரிய ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டத்தைச் சந்தித்துவருகிறது. இந்தியாவின் ரயில்வே நவீனத்தின் பாதையில் செல்கிறது. இது தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பாகும்.
உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ந்துவருகிறது. கடந்த ஆறு வருடங்களாக நாட்டின் போக்குவரத்துத் துறை மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன்மூலம், நாட்டின் அடித்தளமாக உள்கட்டமைப்பு விளங்குகிறது" என்றார்.
பிரக்யாராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும்.
இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. இந்தக் கட்டடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ‘கிரிகா 4’ தரத்தில் ‘சுகம்யா பாரத் திட்டத்தின்’ விதிமுறைகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் 1856 கி.மீ. லூதியானா (பஞ்சாப்) அருகில் உள்ள சானேவால் பகுதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் வழியாக மேற்குவங்கத்தின் டன்குனியில் முடிவடைகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தத்ரியை மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்துடன் இணைக்கிறது. மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் நடைபாதை (1,504 பாதை கி.மீ.) அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும்.
இதையும் படிங்க: நிமோனியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி அறிமுகம்