வாரணாசி: உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருந்து வங்கதேசத்தில் டாக்கா வழியாக அசாம் மாநிலம் திப்ருகரை 51 நாட்களில் சென்றடையும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசு சுற்றுலா கப்பல் குறித்த தகவல்கள் கிறங்கடிக்கின்றன. வாரணாசியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக எம்.வி. கங்கா விலாஸ் கப்பலை துவக்கி வைத்தார்.
எம்.வி. கங்கா விலாஸ் குறித்த ருசிகர தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உள்ளூர் மட்டுமின்றி, உலக அளவிலான சுற்றுலாப் பயணிகளிடையே எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. டைட்டானிக் கப்பலுக்கு ஈடாக நதிப் பயணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை கண் முன்னே கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் கொண்டு வந்து நிறுத்தும் எனக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து புறப்படும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல், 27 நதிகள் வழியாக இந்தியா - வங்காளதேசம் இடையே 5 மாநிலங்களைக் கடந்து 3ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. 51 நாட்கள் பணித்திற்குப் பின் அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரை கங்கா விலாஸ் கப்பல் அடைகிறது.
62 மீட்டர் நீளம் உள்ள கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலில், 36 பயணிகள் ஆடம்பரமாக தங்கும் வகையில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு மிக ஆடம்பரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 18 சூட் ரூம்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்து விதமான வசதிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
பாட்னா, ஷகீப்கஞ்ச், கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா, அஸ்ஸாமின் கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள், காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் வழியாக சொகுசுக் கப்பல் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கா ஆர்த்தி, சார்நாத், புத்த மத கோயில்கள் எனப் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களைக் கடந்து கப்பல் பயணம் நீள்கிறது. இந்த கப்பலில் பயணிக்கவும், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் இரு நபர்களுக்கு வரியுடன் சேர்த்து 42ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரம் இரவு தங்கும் அறையும் சேர்த்து என்றால், 85 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான 54 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஜிஎஸ்டி வரி, இதர வரிகள் சேர்த்து 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சரியாக மார்ச் 1ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலில் ஒரு முறை 36 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். முழுக்க முழுக்க நதிப் பயணம் மேற்கொள்ளும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல், சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான உணர்வு மற்றும் மறக்க முடியாத ஆடம்பரமான அனுபவத்தை கொடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Joshimath Sinking: புதையும் இமயமலை நகரங்கள்.. இது வெறும் தொடக்கம் தான்..!