டெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ளது ஜாலியன் வாலாபாக். நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களைப் போற்றும்விதமாக அப்பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடம் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது.
அதை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.25 மணிக்கு காணொலி மூலமாகத் திறந்துவைக்கவுள்ளார். மேலும் நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் திறந்துவைக்கவுள்ளார். மேலும், வளாகத்தை மேம்படுத்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்நிகழ்ச்சியின்போது விளக்கப்பட உள்ளது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
பயன்பாட்டில் இல்லாத, அதிகம் பயன்படுத்தப்படாத கட்டடங்களைச் சீரமைத்து நான்கு அருங்காட்சியக காட்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் பஞ்சாபில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை முப்பரிமாண முறையில் இந்தக் கூடங்கள் காட்சிப்படுத்துவதோடு, கலை, சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
1919 ஏப்ரல் 13ஆம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்வுகளைக் காண்பிக்கும் ஒலி-ஒளி காட்சியும் இடம்பெறும். வளாகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாபின் கட்டடக் கலை அமைப்பை ஒத்து விரிவான பாரம்பரிய புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாஹீதி கிணறு சீரமைக்கப்பட்டுள்ளது. நினைவு சின்னத்தின் மையப் பகுதி சீரமைக்கப்பட்டு, நீர்நிலை அல்லி குளமாக புத்தாக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
புதிய இடங்கள்
முறையான வழிகாட்டுதல்களுடன்கூடிய புனரமைக்கப்பட்ட வழித்தடங்கள், முக்கிய இடங்களில் ஒளி வசதிகள், உள்ளூர் செடிகளைக் கொண்டு தோட்ட அமைப்புகள், தோட்டம் முழுவதும் ஒலி வசதிகள் உள்ளிட்ட புதிய, நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சால்வேஷன் மைதானம், அமர் ஜோதி (அணையா விளக்கு), கொடிக் கம்பத்திற்கென புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய கலாசார அமைச்சர், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர், மத்திய கலாசார இணை அமைச்சர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள், பஞ்சாபைச் சேர்ந்த அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க : சென்னையில் மேம்பாலங்கள் - பொதுப்பணித் துறை அறிவிப்பு