டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளில் நிலவி வரும் உணவு, எரிவாயு, உரம் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு எதிராக போராட அனைவரிடம் இருந்து ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உணவு, உரம், எரிபொருள் நெருக்கடி தொடர்பான குரல் உலக நாடுகளிடையே எழுந்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது மிகப் பெரிய சவால என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
உலக நாடுகளின் வணிக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலான பயங்கரவாதத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் அதை தடுப்பதற்கான ஒருமித்த கருத்து மற்றும் சிந்தனையை கொண்டு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாக பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, உறுப்பினர் நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான நேர்மையான அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும் என்று கூறினார்.
பயங்கரவாதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்து, அதை வேரறுக்க உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை அடையாளம் காண நமக்கு ஒரு கூட்டு அணுகுமுறை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நாடுகளிம் நடைமுறைவாதம் மட்டுமே அமைதி மற்றும் வணிகத்திற்கான இணக்கமான சூழலை உருவாக்க உதவும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தக முன்னுரிமை மற்றும் இணைப்பு ஊக்குவிப்பை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி பேசினார். ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் அனைத்து நாடுகளின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் வகையில் இருப்பதாக மோடி தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முழு யூரேசியா பிராந்தியத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளதாகவும், இந்த பிராந்தியத்துடனான இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் பகிரப்பட்ட பாரம்பரியத்திற்கு வாழும் சாட்சியாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க : மயில் மீது பெண் புகார் - கர்நாடகாவில் அதிர்ச்சி