பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (பிப். 6) பல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடகா சென்றுள்ளார். இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கர்நாடகா செல்வது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கும் முதல் இடம் இதுவே. ஆகையால் இதனை தக்க வைத்துக்கொள்வதற்காக இத்தகைய திட்டங்களை பாஜக முன்னெடுத்து வருகிறது.
கர்நாடகாவில் பலவேறு திட்டங்களை தொடங்க உள்ளார், பிரதமர் மோடி. இவர் பெங்களூருவில், “இந்தியா எனர்ஜி வீக் 2023” மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு இன்று முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பசுமை எரிபொருள் குறித்து தும்கூரில் நடைபெறும் பசுமை இயக்க பேரணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையைத் திறந்து வைக்க உள்ளார். இது இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இத்துடன், ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து டெல்லி திரும்புகிறார்.
இதையும் படிங்க: " தி ஹார்வர்டு லா ரிவ்யூ" பத்திரிக்கையின் தலைவரான இந்திய வம்சாவளி!