டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள குதுப் மினார் வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்து மற்றும் சமண தெய்வங்களை மீட்டெடுப்பதற்கும், அங்கு வழிபடுவதற்கும் உரிமை வழங்கக்கோரி டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சமண தெய்வம் தீர்த்தங்கர் பிரபு ரிஷாப் தேவ் மற்றும் இந்து தெய்வ பகவான் விஷ்ணு சார்பாக முறையே ஹரிசங்கர் ஜெயின், ரஞ்சனா அக்னிஹோத்ரி, ஜிதேந்திர சிங் பிசன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
அந்த மனுவில், "மம்லுக் பேரரசர் குதுப்-உத்-தின் ஐபக் 27 இந்து மற்றும் சமண கோயில்களை அகற்றிவிட்டு, வளாகத்திற்குள் குதுப் மினாரைக் கட்டியுள்ளார். ஐபக்கால் கோயில்களை முற்றிலுமாக இடிக்க முடியவில்லை மற்றும் கோயில்களின் இடிபாடுகள் மீது ஒரு மசூதியைக் கட்டியிருந்தார்.
வளாகத்தின் சுவர்கள், மொட்டை மாடி மற்றும் தூண்களில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டமைப்பில் சிவன், விநாயகர், கணேஷ், தேவி கௌரி, சூரியன், ஹனுமன் ஜெயின் தீர்த்தங்கர்கள் உள்ளிட்ட அனைத்தும் மீட்கப்பட்டு கோயில் வளாகத்தில் முறையாக பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும்.
அறக்கட்டளை சட்டம் 1882 இன்படி, ஒரு அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குதுப் வளாகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள கோயில் வளாகத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தை உருவாக்கவுள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இஸ்லாமிய ஆட்சியாளர் முகமது கோரியின் ராணுவத்திலிருந்த ஜெனரல் குதுப்தீன் ஐபக் என்பவரால் இந்த கோயில் இடிக்கப்பட்டு குதுப்மினார் எழுப்பப்பட்டது என்பதால், பழைய இந்து மற்றும் சமணக் கோயில்கள் நிறுவப்பட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு டிசம்பர் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்