குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ரயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஞ்சம்மா என்ற பெண்மணி, கணவரை இழந்த நிலையில் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார்.
அவரது இளைய மகன் ஆகாஷ்(18) அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஒழுங்காக படிப்பதில்லை என அவரது ஆசிரியர் அடிக்கடி திட்டி வந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரம் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆசிரியர் படிக்காதவனுக்கு சாப்பாடு எதற்கு? எனக்கூறி கையிலிருந்த சாப்பாட்டை பிடுங்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் அவமதித்தது தொடர்பாக ஆகாஷ் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அவரைத் தேற்றிய தாயார் மீண்டும் ஆகாஷை பள்ளிக்கு அனுப்பியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக மீண்டும் ஆகாஷை திட்டிய ஆசிரியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஆகாஷ், இரண்டு நாட்களாக பள்ளிக்குச்செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8)தாயும் சகோதரனும் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய வழிகாட்டுதல் இன்றி கல்வி கற்கும் மாணவர்களை ஆசிரியர்கள் சரியான பாதையில் வழிநடத்துவதை விட்டுவிட்டு, இதுபோல் அவமதிப்பது மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.
இதையும் படிங்க:திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை - போலீசார் தீவிர விசாரணை!