பெங்களூர்: அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் என்ற உளவுச் செயலியின் மூலம் இந்தியாவிலும் 300-க்கு மேற்பட்டோரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது புதிதல்ல
இது தொடர்பாக பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, " கடந்த 10 வருடங்களுக்கு மேல் இந்த உளவு பார்க்கும் முறை இருந்து வருகிறது. இது புதிதல்ல. பல அரசாங்கத்தாலும், வருமான வரித்துறையினராலும் ஒட்டுக்கேட்பு நடந்துள்ளது. இது மோடி அரசாங்கத்தில் மட்டும் நடக்கவில்லை. கர்நாடக முதலமைச்சராக நான் இருந்த காலத்தில் ஒட்டுகேட்பு நடந்ததாக கூறப்படுகிறது, நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
இந்த விவகாரத்தை விட்டுவிட்டு அனைத்து கட்சிகளும் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கூறினார்.
ஆட்சி கவிழ்ப்பு?
2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் அரசை கவிழ்க்க குமாரசாமியின் தனிச்செயலாளர் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.