புதுச்சேரி: காரைக்காலைச் சார்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கடந்த 9-ம் தேதி மீனவர்களின் படகு, மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ததுடன் 13 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.
இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்களின் குடும்பத்தார் நேற்று (டிச.13) காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் தலைமையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை உடனடியாக மீட்டு கொடுக்க வேண்டும் எனவும், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக உண்ண உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் முதல்வரிடம் தெரிவித்தனர்.
இதனை கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது சம்பந்தமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் சேவா புரஸ்கார் விருது பெறும் தெற்கு ரயில்வே பணியாளர்கள்!