பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர் நிங்கராஜூ. கடந்த 2015ம் ஆண்டு பெங்களூருவில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் நிங்கராஜூவின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசிவிட்டு தப்பினர். இந்த வழக்கில்தான், 8 ஆண்டுகளுக்கு பிறகு நிங்கராஜூவின் சகோதரி பாக்யஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர்கள் சுபுத்ரா சங்கரப்பா தல்வார் மற்றும் பாக்யஸ்ரீ. இருவரும் கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இருவருக்கும் அவரவர் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். எனினும் சங்கரப்பா, பாக்யஸ்ரீ இடையே பழக்கம் நீடித்துள்ளது.
இந்நிலையில் வேலைக்காக தாம் பெங்களூரு செல்வதாகவும், தன்னுடன் வருமாறும் பாக்யஸ்ரீயை சங்கரப்பா அழைத்துள்ளார். அதன்படி வீட்டை விட்டு வெளியேறிய பாக்யஸ்ரீ, சங்கரப்பாவுடன் பெங்களூருவில் குடியேறினார். இருவரும் கணவன் மனைவி போல் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் பாக்யஸ்ரீயின் குடுமபத்தினர் அவர் பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வருவதாக நினைத்துள்ளனர். சம்பவத்தன்று பாக்யஸ்ரீயை அவரது சகோதரர் நிங்கராஜூ பார்க்க சென்றுள்ளார். அப்போது, சங்கரப்பாவுடன் தனது சகோதரி ஒன்றாக வசித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
சங்கரப்பாவுடன் பாக்யஸ்ரீ நெருக்கமாக பழகுவதை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்ட சூழலில் பாக்யஸ்ரீ கத்தியால் தாக்கியதில், நிங்கராஜூ சம்பவ இடத்திலேயே இறந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நிங்கராஜூவின் உடலை துண்து துண்டாக வெட்டி, அதை 3 பைகளில் வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு இருவரும் தப்பினர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தியும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தப்பிய இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கர்நாடகா போலீசார் இருவரையும் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். இருவரும் பிரியாங்கா, வினோத் ரெட்டி என பெயரை மாற்றிக் கொண்டு நாசிக்கில் வசித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது