புதுச்சேரி: மூத்த பெரியாரியத் தொண்டர் அய்யா வே. ஆனைமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 96.
தன்னைப் பெரியாரின் தொண்டனாக அறிவித்துக் கொண்ட போதும் பொதுவுடமை, நாட்டின் விடுதலை ஆகிய கருத்துகளில் மிகுந்த பற்று கொண்டவர். பெரியாரின் வழி வந்த காரணத்தினாலோ என்னவோ, பெரியாருடைய சிந்தனைகளையும், அதன் இன்றைய பொருத்தப்பாடுகளையும் ஊடறுத்துப் பார்க்கக் கூடிய தெளிந்த சிந்தனையாளர்.
வட இந்தியா முழுவதும் பயணம் செய்து பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டுக்காக உழைத்தவர். அய்யா ஆனைமுத்துவை மண்டல் ஆணையத்தின் நாயகன் என்று சொன்னாலும் தகும். தோழர் தமிழரசன் கூட்டிய தமிழ்நாடு விடுதலை மாநாட்டில் பங்கெடுத்தவர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர் - தலைவர்.
பெரியாரின் அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட அறைகூவலை ஏற்று இந்தியச் சட்டத்தை எரித்து சிறை சென்றவர். அதுமட்டுமல்ல இந்திய அரசியல் சட்டத்தின் மக்கள் பகைத்தனத்தையும், தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கையையும் அம்பலப்படுத்தி "அரசியல் சட்டத்தின் மோசடிகள்" என்ற நூலையும் படைத்தவர். ஒரு நெருக்கடியான காலத்தில் உயிரிழந்திருப்பது தமிழ் மக்களுக்கு பேரிழப்பு ஆகும். நாளை தாம்பரத்தில் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.