டெல்லி: ராஜிவ் காந்தி வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைக் கைதியாக உள்ள பேரறிவாளன், தற்போது பரோலில் வெளிவந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் தங்கியுள்ளார்.
கடந்தாண்டு மே மாதம் 28ஆம் தேதி, சென்னை புழல் சிறையில் இருந்து வெளிவந்த பேரறிவாளன், நீரிழிவு, சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார். பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரின் பரோலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட்டித்துவந்தது.
மத்திய அரசு கடும் எதிர்ப்பு
இதில், சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனின் தண்டனைக் குறைப்பு தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, கடந்த 2016இல் சிறப்பு விடுப்பு மனு ஒன்றை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தது. இதனால், தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன், பரோல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் தனக்கு பிணை வழங்க வேண்டி முறையிட்டார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ், பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது தெரிவித்த நீதிபதிகள்,"மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒன்றிய அரசின் கடுமையான எதிர்ப்புக்கும் மத்தியிலும் அவருக்கு பிணை வழங்க முடிவெடுத்துள்ளோம்" என்றனர்.
நன்னடத்தை காரணமாக...
மேலும், " அவர் சிறைவாசத்தின்போது பெற்ற கல்வித் தகுதிகளுக்கும், அவர் உடல் நலக்குறைபாட்டிற்கும் போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்" எனக்கூறிய நீதிபதிகள் அவரின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பேரறிவாளன், மாதத்தின் முதல் வாரத்தில் அவரின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையின் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதா இன்னும் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கண்ணகி நீதி கேட்ட மதுரையில் பட்டியல் சமூகத்தினருக்கும் நீதி கிடைத்துள்ளது'