நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் பொத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் புது முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசினார்.
கர்நாடாக மாநில மங்களூரில் பேசிய அவர், " காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளில் நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என பிரதமர் மோடியும் பாஜகவினரும் கூறுகின்றனர். காங்கிரஸ் அரசு காலங்கலாமாக உருவாக்கி வந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பிரதமர் மோடி விற்கப் பார்க்கிறார்.
ரயில்வே துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்க பாஜக அரசு துடிக்கிறது. இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு குரல் தர வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது ரயில்வேயில் 16 லட்சம் பேர் வேலை பார்த்துவந்த நிலையில், தற்போது அது 12 லட்சமாக சுருங்கிவிட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்சை, கார்கே நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: உ.பி தேர்தல் - நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை