தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா கூறுவதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்கூட நாடகம் என்றே கருதுகின்றனர் என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது குறித்து கிஷன் ரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது தேர்தல் ஆணையத்தின் பார்வை மட்டுமல்ல, பொது மக்களும் அதையே தான் எண்ணுகின்றனர். மேலும், பிற கட்சியினர், அவரது சொந்தக் கட்சியினர், மேற்கு வங்க காவல்துறை என அனைவரும் இதை ஒரு நாடகம் என்றே கருதுகிறார்கள். மம்தா இதன் மூலம் மேலும் தரம் தாழ்ந்துவிட்டார்" என்றார்.
மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நந்திகிராம், ரேயேபாரா தொகுதியில் தேர்தல் பரப்புரையில் மம்தா ஈடுபட்டிருந்தபோது சிலரால் கீழே தள்ளப்பட்டதாகக் கூறி, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'இது திட்டமிட்ட செயலா' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது சதிச் செயல்தான். சம்பவம் நடைபெற்றபோது, என்னைச் சுற்றி காவலர்களே இல்லை" என்றும் மம்தா கூறினார். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மார்ச் 12ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து மம்தா வீடு திரும்பினார்.
இதையும் படிங்க: சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கும் மம்தா!