இஸ்ரேல் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பட்டாளர்களை இந்திய அரசு வேவு பார்த்ததாக கார்டியன், வாஷிங்டன் போஸ்ட், தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் இணைந்து ஜூலை 18ஆம் தேதி புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
இந்தப் புலனாய்வுக் கட்டுரையில், இந்தியாவிலுள்ள 300 நபர்கள் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அதில், 40 ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடக்கம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில்,ஓய்வு பெற்ற அல்லது நடப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இவ்விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி பிரபல மூத்த பத்திரிகையாளர்களான ’இந்து’ என் ராம், சசிகுமார் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு, அடுத்த சில நாள்களுள் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தின் ஏதேனும் அமைப்புகளோ பெகாசஸ் ஸ்பைவேருக்கான உரிமத்தைப் பெற்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கண்காணிப்பில் ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரியுள்ளனர்.
பெகாசஸ் விவகாரம் குறித்து ஏற்கெனெவே ஐந்து பேர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!