பாட்னா : பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
38 மாவட்டங்களைக் கொண்ட பீகாரில் ஏறத்தாழ 12 கோடியே 70 லட்சம் மக்கள் வசித்து வருவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தின் நீண்ட கால கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க உத்தரவிட்டார். இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மாநில அரசு, கணக்கெடுப்பு பணிகளுக்கு அங்கன்வாடி உள்ளிட்ட அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி வந்தது.
இரண்டு கட்டங்களாக மே மாத இறுதிக்குள் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க மாநில அரசு திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தனியார் தரப்பில் மனு தாக்கல் செய்யபப்ட்டது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக்கோரியும் முறையிடப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமியிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குத் தொடர்பாக வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வராது என்றும்; வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மாநிலத்தில் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்று சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் இல்லை என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமையிலான அமர்வு, மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வரும் ஜூலை 3ஆம் தேதி வரை இந்த இடைக்காலத் தடை அமலில் இருக்கும் என்றும்; அதன்பின் வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறி உத்தரவிட்டனர்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு பீகார் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. மேலும் இந்த உத்தரவு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சுப்ரியா சுலேவிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின், ராகுல்! மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்!