பன்ஸ்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் தான் இந்த துயரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. தனபூர் கிராமத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க தேஜியா என்பவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார்.
திடீரென தேஜியா மயக்கமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் டீசல் தீர்ந்ததால் பாதி வெளியில் நின்றது.
ஆம்புலன்ஸ் நின்ற பகுதியில் எரிபொருள் நிலையம் இல்லை எனக் கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய தேஜியாவை காப்பாற்ற அவரது மகள் மற்றும் மருமகன், உறவினர்கள் ஆம்புலன்சை தள்ளிச் சென்றனர்.
அருகில் உள்ள எரிபொருள் நிலையத்தில் டீசல் வாங்கி வந்து ஆம்புலன்சில் ஊற்றிய போதும் ஆம்புலன்ஸ் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வேறொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேஜியா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை அழைத்து வரப்பட்ட தேஜியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவத்துறை பல்வேறு வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எரிபொருள் தீர்ந்து நடுவழியில் நின்ற ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து மரணம்