ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று(ஏப்.27) ஜெய்ப்பூருக்கு புறப்பட இருந்தது. காலை 10.40 மணிக்கு விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த 288 பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தனர். அதன் பின்னர் காலை 9.15 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையும் பயணிகளிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
குறிப்பிட்ட விமானத்தில் பயணிப்பதற்காக வந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் அலோக் பரீக் கூறும்போது, "இன்று காலை கவுஹாத்தியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை அந்நிறுவனம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்தது. விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்த பிறகுதான், விமானம் ரத்தானது பயணிகளுக்கு தெரியவந்தது. இதற்குப் பதிலாக எந்த மாற்று ஏற்பாடும் விமான நிறுவனம் செய்யவில்லை. இதனால் பயணிகள் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்" என்று கூறினார்.
தொழில்நுட்பக் காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இன்று காலை ரத்து செய்யப்பட்ட கவுஹாத்தி - ஜெய்ப்பூர் விமானம் நாளை(ஏப்.28) காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வடமாநில கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை எனக் கூறி மோசடி - பக்தர்களுக்கு எச்சரிக்கை!