திருச்சூர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பாதயாத்திரை நடந்துகொண்டிருக்கும் நிலையில், அவரை வரவேற்கவிருந்த திருச்சூர் காங்கிரஸ் அலுவலகம் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்த சம்பவம் அம்மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்பதற்காக அலுவலகத்தை மூவர்ண நிறத்தில் பெயிண்ட் அடிக்க அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் காவி நிறம் மட்டும் பெரிதாக வர்ணம் செய்யப்பட்டதால் சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெயிண்ட் அடிக்கும் ஊழியர்கள் தவறுதலாக இப்படி செய்ததால் இது நடந்துவிட்டதாக அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கே இந்த விவகாரம் குறித்து தாமதமாகத் தான் தகவல் கிடைத்ததாகவும், அதற்குள் இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, தற்போது காவி நிறங்கள் அதிகம் பூசப்பட்ட பகுதிகளில் தற்போது பச்சை நிறங்களைப் பூசி வருகின்றனர். இதற்கிடையில், இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பலதரப்பட்ட வாதங்களுக்கு அக்கட்சியை உள்ளாக்கிவிட்டது.
நாடெங்கும் மாபெரும் பாத யாத்திரையாக ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நிகழ்த்தி வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் ஓர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.5.47 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் காவல் துறையினரால் நொறுக்கி அழிக்கப்பட்டன!