உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நான்கு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளது. இந்தக் குழுவானது அங்குள்ள உள்ளூர் பிரதிநிதிகளிடம் வணிகம், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் முதல்முறையாக ஜம்மு காஷமீர் அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஜூன் மாதம் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற குழுவின் பயணம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயணத்தின் முக்கியத்துவம்
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு தற்போது இரண்டாண்டுகள் கடந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் இயல்பு நிலையை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது.
அதன் பின்னணியில்தான் பிரதமர் மோடி ஜம்மு காஷமீர் அரசியல் தலைவர்களை டெல்லியில் சந்தித்தார். தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு பயணமும், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக அரசியல் நடவடிக்கையை மீட்கும் நோக்கிலேயே உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரைவு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதும் அங்குள்ள அரசியல் தலைவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நரேந்திர மோடி கோயில்: இரவோடு இரவாக மாற்றப்பட்ட பிரதமர் சிலை!