நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில், பெரும் அமளி ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றம் திட்டமிடப்பட்ட 107 மணிநேரத்தில் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டது என்றும் இதன் விளைவாக வரி செலுத்துவோரின் பணத்தில் 133 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 89 மணிநேரம் இந்தக் கூட்டத்தொடரில் வீணாகியிருப்பதாகவும், மாநிலங்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 21 விழுக்காடு செயல்பட்டாலும், மக்களவை திட்டமிடப்பட்ட நேரத்தில் 13 விழுக்காட்டிற்கும் குறைவாகவே செயல்பட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”மக்களவை 54 மணி நேரத்தில் ஏழு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. மாநிலங்களவை சாத்தியமான 53 மணிநேரத்தில் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கணக்கிடப்பட்ட 107 மணிநேரத்தில் (16.8 விழுக்காடு) நாடாளுமன்றம் 18 மணிநேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. இந்த இடையூறுகளால் அரசுக்கு 133 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் அமளிக்கு மத்தியிலும் மக்களவையில் ஐந்து மசோதாக்களும் மாநிலங்களவையில் கிட்டத்தட்ட இதே போன்ற மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நேர விரயம் குறித்து தற்போது ஒன்றிய அரசும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: முத்தலாக் தடை சட்டம் 2ஆம் ஆண்டு நிறைவு: ஆக.01 இனி ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாள்’