மகாராஷ்டிரா: ஊரான் தாலுகாவில் உள்ள கரஞ்சா தீவில் உள்ள கடற்படை தள முகாமில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்த 22 வயதான கடற்படை அலுவலர் விஷால் மகேஷ் குமார் காணவில்லை. எனினும், கடற்படையினரிடம் இருந்து முறையான ஒத்துழைப்பு இல்லை எனவும், இது தொடர்பான விஷயத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் விஷால் மகேஷ் குமாரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, 22 வயதான விஷால் நவம்பர் 3ஆம் தேதி கடற்படை முகாமிலிருந்து ஊரான் நகரில் உள்ள நீச்சல் குளத்திற்கு நீந்த சென்றபோது திடீரென காணாமல் போனார்.
இதேவேளை கடற்படையினரால் சரியான பதில்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காணாமல் போனதாக கடற்படையினர் புகார் எதுவும் அளிக்கவில்லை. நீச்சல் குளத்தில் விஷாலின் மோட்டார் சைக்கிளை கடற்படையினர் எடுத்துச்சென்றது ஏன்? மேலும், விஷால் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தயக்கம் ஏன்? விஷால் காணாமல் போன பிறகு தலைமை அதிகாரியும் விஷாலின் நண்பரும் திடீரென விடுப்பில் செல்வது ஏன்? போன்ற கேள்விகளை விஷாலின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
விஷால் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. விஷாலினை கண்டுபிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் விஷால் குறித்து தகவல் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தெஹ்ரி ஏரியில் 25 நிமிடங்களாக தத்தளித்த இளைஞர்