ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகரன்பூர் பகுதியில் நேற்று (ஜூன் 11) இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து வந்தது. இருநாட்டு எல்லைப் பகுதியில் அந்த ட்ரோன் பறந்ததை பாதுகாப்புப் படையினர் கவனித்தனர். உடனடியாக அதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த அதன் உடைந்த பாகங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து ஸ்ரீகரன்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகரன்பூர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ட்ரோன் ஒன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பிறகு தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை வீரர்கள் பிடித்து விசாரித்தனர். அதேபோல், அப்பகுதியிலிருந்து இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகளும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ஸ்ரீகரன்பூர் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு மற்றொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்:
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தானிலிருந்து இந்த ட்ரோன்கள் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதிகளில் வீசப்படுவதாக தெரிகிறது.
குறிப்பிட்ட இடத்தில் வீசப்பட்ட போதைப்பொருளை கடத்தல்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த போதைப்பொருட்களை பெரும்பாலும் பஞ்சாபில் உள்ள கடத்தல் காரர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் முயற்சிகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். கடத்தல்காரர்களையும் வீரர்கள் கைது செய்கின்றனர்.
முன்னதாக நேற்று பஞ்சாபில் ராஜோகே என்ற கிராமத்தில் வயல் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று முற்றிலும் உடைந்த நிலையில் கிடந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ட்ரோன் உடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேய்கள் நடமாட்டத்தை விசாரித்த காவல் அதிகாரி சஸ்பெண்ட்: கொள்ளை வழக்கில் நடவடிக்கை