குஜராத் : எல்லைத் தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஏறத்தாழ 200 இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்லை பாதுகாப்பு மற்றும் கடத்தல், பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்கும் விதமாக தங்கள் நாட்டு கடல் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. எல்லைத் தாண்டி மீன் பிடிப்பவர்களையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படை கைது செய்து வருகிறது.
அந்த வகையில் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட 200 மீன்வர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்திய பாகிஸ்தான் வாகா எல்லையை அடைந்ததும் குடியுரிமை உள்ளிட்ட சோதனைகள் செய்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறியதாக கூறி எதிர் நாட்டு படைகள் கைது செய்வதாக கூறப்படுகிறது. அப்படி இந்திய கடற்பரப்பில் இருந்து பிடிபட்ட பெரும்பாலான மீனவர்கள் கராச்சி அருகே உள்ள லாந்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 274 பேரை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த மே. 12ஆம் தேதி 198 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் போர்பந்தர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 198 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் பிரதிபலனாக மேலும் 200 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக ஜூலை மாதம் 100 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்திய மீன்வர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 188 படகுகள் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பின் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் விரைவில் அது மீட்டுத் தருமாறும் மத்திய அரசுக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இதையும் படிங்க : டெல்லி அவசரச் சட்டம்... கெஜ்ரிவாலுக்கு பெருகும் ஆதரவு.. புது ஆதரவு யார் தெரியுமா?